பால்யமும் பாளை வண்டியும் ..
வார விடுமுறை இன்று. வானம் விடியற்காலையிலேயே விழித்து, முற்றம் தெளித்து, செடி கொடிகளுக்கெல்லாம் தண்ணீர் தெளித்திருந்தது. மழை காரணமாக இதமான காலைக் குளிர், மெத்தையில் குப்புறக் கவிழ்த்து எனை எழவிடாமல் சோம்பலைக் காட்டி, போர்வைக்குள் அழுத்திவிடப் பார்த்தது. ஆனால், ஏழாவது தளத்தில் படுக்கையில் கவிழ்ந்திருந்த என் காதுக்குள் காகம் கரையும் சத்தம் கேட்டு, தூக்கம் தொலைந்துபோனது.
தினமும் ஆசுவாசமின்றி இயந்திரமாய் கடந்துபோகும் எந்நாளையும் போல் இந்நாளையும் கடந்துபோக விருப்பமில்லாமல், சோம்பலை முறித்து, போர்வையைச் சுழற்றி வீசிவிட்டு எழுந்தேன். இந்நாளுக்காகவே காத்திருந்த மாதிரி, குளிர்ந்த நான்கு பாட்டில் 'மீன்கொத்தி மார்க்' நுரைத்த சோடாவைக் குடித்த வயிறுபோல வீங்கி இருந்தது துவைக்க வேண்டிய துணிக்கூடை. அதை அப்படியே துணி துவைக்கும் இயந்திரத்தில் கொட்டி ஓடவிட்டு, பல நாட்களுக்குப் பிறகு சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினேன் காலாங் ஆற்றங்கரை பூங்காவை நோக்கி.
ஊத்தட்டுமா போகட்டுமா என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்த கரிய மேகம், அழகிய காரிகை ஆற்றில் அலம்பி முகர்ந்து இடுப்பில் சுமந்து செல்லும் தண்ணீர் குடத்திலிருந்து தளும்பிச் சிந்தும் நீர்த்துளிகள் , வானத்திலிருந்து கொட்டுவது போல் சின்னச் சின்ன மழைத்துளிகள் எனை நனைத்து சென்றது. பொழுதுகள் தினமும் இவ்வாறே விடிந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது.
பூங்காவை நெருங்க நெருங்க மணிப்புறா, மைனா, கிளிகள், குயில்களின் ஓசைகள் கேட்கத் தொடங்கின. அங்கும் இங்குமாக ஓடிப் புற்புதர்களைக் காலால் கிளறும் சில சேவல்களும், கோழிகளும், அதன் குஞ்சுகளுமாக மேய்ந்துகொண்டிருந்தன. ஆற்றின் கரையோரமாக ஒன்றிரண்டு நாரைகள் இன்னும் நினைத்த வரம் கிடைக்காமல் ஒற்றைக்கால் தவம் செய்துகொண்டிருந்தன. சில வருடங்களாகக் கவனிக்கிறேன்—இதயத்தைத் தொலைத்த "டெகா" (Te Fiti) போலிருந்த சிங்கப்பூரின் இயற்கை, திருடப்பட்ட அவளின் இதயத்தை "மோனா" (Moana) கண்டுபிடித்து ஒப்படைத்த பிறகு, மென்மையான அழகிய "டெ ஃபிட்டியாக" மாறி இயற்கை புத்துணர்வு பெற்றதுபோல ஏகப்பட்ட மாற்றங்கள்! விதவிதமான பலவகை பறவைகள் எழுப்பும் ஓசைகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
இயற்கையான மாற்றங்களை ரசித்தபடி நடந்து கொண்டிருந்தேன் காலாங் ஆற்றின் கரையில். வருடந்தோறும் நடைபெறும் உலகப் புகழ்வாய்ந்த சிங்கப்பூரின் "ஃபார்முலா ஒன்" (Formula One) கார் பந்தயத்திற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதன் காரணமாக ஆற்றின் கரையோரங்களில் நின்றிருந்த தென்னை மரங்களின் கொண்டைகளைச் சீவிச் சிங்காரித்திருந்தனர். அதிலிருந்து விழுந்த சிறிய தென்னம்பாளையிலிருந்து பிரிந்த பாளை ஓடு ஒன்று, பரந்த புல்வெளியில் பாம்பு விரித்த படம் போல் விழுந்து கிடந்தது. அது என்னை நினைவுகள் மூலமாக நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்குக் கடத்திச் சென்றது.
எங்கள் ஊர் புன்னைச்சாத்தான்குறிச்சியில் உள்ள தமிழ் மூதும் பெரும் தாய் தெய்வம் "அருள்மிகு முத்தாரம்மன்", "ஸ்ரீ முத்தாரம்மனாக"ப் பட்டம் ஏற்பதற்கு முன்பு, கோயிலைச் சுற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் இருந்தன. அனைத்தும் நீண்டு உயர்ந்த நெட்டையான, பச்சை மற்றும் சிவப்பு நிறத் தேங்காய் ஓடுகளைக் கொண்ட வெவ்வேறு ரகமான தென்னை மரங்கள். எங்கள் மூதாதையர்கள் கோயிலின் பராமரிப்புச் செலவுக்குத் தேவையான வருமானத்தை ஈட்ட உருவாக்கிய மரங்கள் அவை. ஒவ்வொரு மரத்திற்கும் தனிப்பட்ட எண்கள் சிவப்பு, பச்சை வண்ணங்களில் வரையப்பட்டிருக்கும். எங்கள் ஊர் அம்மனுக்கு இரண்டு வருடத்திற்கு ஒருமுறைதான் கொடை விழா நடத்தப்படுவதுண்டு.
கொடை விழா துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, இந்தத் தென்னை மரங்கள் ஊர்மக்களுக்கு ஏலத்திற்கு விடப்படும். மரத்தின் காய்க்கும் தன்மையைப் பொறுத்து ஐம்பது ரூபாயிலிருந்து அதிகபட்சமாக எழுநூறு ரூபாய் வரைக்கும் ஏலம் போகும். அதன் மூலமாக வரும் வருவாய் கோயில் பராமரிப்புச் செலவுக்கு மிகப்பெரிய பங்காற்றும். அப்பா அதில் மூன்று தென்னை மரங்களை ஏலம் எடுத்திருந்தார். எங்களின் விளையாட்டு உலகமே அந்தத் தென்னை மரக் கூட்டம்தான்.
தென்னம்பூவை மூடியிருக்கும் கடினமான "பாளை ஓடு"தான் எங்களின் விளையாட்டு வாகனம். அசப்பில் படகின் சாயலில் இருப்பதால் 'படகு வண்டி' என்றோ, 'கப்பல் வண்டி ' என்ற பெயரிலோ அழைப்போம். பாளையின் கூர்முனையில் நீளமான கம்பைச் சொருகிச் சாலையில் வேகமாகத் தள்ளிக்கொண்டே சென்றால், தண்ணீரில் சீறிப்பாயும் படகுபோலப் பறந்து செல்லும் எங்கள் படகு வண்டி. எப்போதும் எங்கள் வீட்டின் கூரைகளில் சொருகி வைத்திருப்போம். ஆடு மேய்க்க, வேப்பங்கொட்டை பொறுக்க, வாய்க்காலுக்குக் குளிக்கச் செல்ல எனப் போகும் இடமெல்லாம் எங்கள் கனவைச் சுமந்து செல்லும் இந்தப் படகு வண்டியை, எங்கள் அலப்பறை தாங்காமல் அம்மா வீட்டு அடுப்பில் வைத்து எரிக்கும் வரை ஓட்டிக்கொண்டே இருப்போம்.
கடந்தகால நினைவுகளில் சுழன்று கொண்டிருந்த என்னை, அந்தக் காலாங் பூங்கா பகுதியில் நீண்ட காலமாகச் சுற்றி வரும் இருவாட்சி (Hornbill) பறவையின் இரைச்சல் நிஜத்தை உணர வைத்தது. நிஜம் உணர்ந்தாலும், தென்னம்பாளை ஓட்டின் மீதான ஈடுபாடு நீங்கவில்லை. மீண்டும் ஒருமுறை ஓட்டிப் பார்க்கும் எண்ணம் சுடர்விட்டது என்னுள். ஆனால் களவு புரிவது போல் யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது என மனம் பதைபதைத்தது. தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கருப்பை விஞ்சி வெள்ளை பளிச்சிட்ட பிறகும் என்ன இது சின்னப்பிள்ளை தனமாக என்று யாரும் நினைப்பார்களோ என்ற சிந்தனை . நடைபாதையின் இரண்டு பக்கமும் பார்வை சுழன்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒருவரும் இல்லை .
அருகில் கிடந்த காய்ந்த சவுக்கு மரத்தின் சிறிய கிளையை, அதன் இலைகளை நீக்கி எடுத்துக் கொண்டேன்.
பாளை வண்டியின் கூர்முனையில் சவுக்குக் கிளையைப் பொருத்தி நான் தள்ளத் தொடங்கிய போது, காலாங் பூங்காவின் தார்ச் சாலை மறைந்து புன்னைச்சாத்தான்குறிச்சின் மண் வாசனை என் நாசியில் வீசியது.
சக்கரங்கள் இல்லாத அந்த வண்டி, காலச் சக்கரத்தைப் பின்னோக்கி இழுத்துச் சென்று என் பால்யத்தின் புழுதி வாரித் தட்டிய தெருக்களில் என்னை நிறுத்தியிருந்தது.
"நம்மை ஓயாமல் இயக்கும் இந்த இயந்திர வாழ்க்கையில், பக்குவம் என்ற போர்வையைத் தள்ளிவிட்டு, எப்போதாவது இப்படி குழந்தையாக மாறிவிடுவது ஒரு வரம். அது நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தும் ஒரு ரசவாதம்.
தூரத்தில் வீட்டில் இயந்திரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் துணிகளைப் போல, என் நினைவுகளும் ஒரு சுழற்சியை முடித்துக்கொண்டு தற்போதைய யதார்த்தத்திற்கு மெல்லத் திரும்பின.படகு வண்டியை பூங்காவின் ஓரமாய் மெதுவாக நிறுத்தினேன். ஆனால், என் மனதிற்குள் ஏறியிருந்த அந்தப் பால்யத்தின் குதூகலம் மட்டும் இறங்கவே இல்லை. அந்தப் பாளை வண்டி தந்த புத்துணர்ச்சியோடு, காலாங் ஆற்றின் குளிர்ந்த காற்றை நெஞ்சு நிறைய சுவாசித்தபடி, இல்லம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்—இப்போது என் கால்கள் மட்டுமல்ல, என் மனமும் லேசாகப் பறந்து கொண்டிருந்தது..
- விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️..
Comments
Post a Comment