நாட்டமற்ற நாய் அனுபவம்
அவர்களிடம் அவமானப்படுவதே வழக்கமாகிப் போனது . . பொது இடம் என்று பாராமல் பலர் முன்னிலையில் வாயை திறந்து உதட்டை சுளித்து நாக்கை நீட்டி பற்கள தெரிய அவர்கள் என்னை நோக்கி கத்தும் போது முடி முதல் அடிவரை அங்கமெல்லாம் ஆட்டம் கண்டு விடுகிறது . ஒற்றை ஊசிக்கு பயந்து ஆஸ்பத்திரியிலிருந்து அடிப்பட காலோடு வடக்கு ஆத்தூர் மெயின்ரோட்டில் தலை தெறிக்க ஓடியவன் நான் . நாற்பது ஊசி அதுவும் தொப்புளை சுற்றி என்றால்! நினைக்கவே அச்சமாக இருக்கிறது ..
வீட்டில் வளர்க்கும் பிராணிகள் மீது எனக்கு ஆர்வம் கிடையாது.. அதிலும் நாய்கள் என்றாலே ஒரு விதமான ஒவ்வாமைதான். சிறுவயதில் குட்டி நாய் கடித்தற்கு பார்த்த பாட்டி வைத்தியம் எளிமையானது தான் ஆனால் இழந்தவைகள் அதிகம் .
பத்திய சோறுதான் பதினெட்டு நாட்களுக்கு . கத்தரிக்காய் , முருங்கைக்காய் போட்டு அம்மா வைத்திருக்கும் மணக்கும் கருவாட்டு குழம்பை சாப்பிட முடியாது , வீட்டில் சமைத்த அடுப்பில் கிடக்கும் கங்கில் (கனல் ) சுட்ட சால கருவாட்டை கும்பாவில் உற்றிய கஞ்சியோடு சேர்த்து சுவைக்க முடியாது. அச்சமயம் ஊருக்குள எழவு விழுந்திட்டா நம்மல பெட்டி கட்டிறுவாங்க வேற ஊருக்கு. இறந்தவர்களால் நாய்கடிபட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்பிருக்கிறது என்னும் பழையவா வாக்கின்படி பாதிப்பில் இருந்தது தப்பிக்க அவ்வப்போது ஊர் கடத்தப்பட்டேன் ..
அப்போது நாய்கள் மீது உண்டான வெறுப்பு . பக்கத்து வீட்டில் வசித்த சிம்சன் அண்ணன் வீட்டில் வளர்ந்த வெள்ள வெளேர்ன் பூசுன்னு இருந்த ஊர் ரெளடி நாயான பூனைநாயால் மேலும் விரிந்தது . பெரும்பாலும் அந்த பூனைநாய் கண்ணயரும் நேரம் தான் அதனை கடந்து போக முடியும் . மற்ற நேரங்களில் எல்லாம் முறைத்தலும் குரைத்தலுமாக என் பிராணனை வாங்கிக் கொண்டிருந்தது அது .
நான் டீன்ஏஜை எட்டிய போது நடந்த சம்பவம் நாய்களின் மேல் உச்சகட்ட வெறுப்பு வர காரணமாக அமைந்தது. வீட்டில் சமையல் வேலை செய்த அம்மா அவசரமாக எண்ணெய் வாங்கி வர கடைக்கார தாத்தா கடைக்கு அனுப்பினார்.. என் வீட்டிற்கு எதிராக சென்ற சிறிய குறுக்குப் பாதை வழியாக சென்றேன். ஆனைபட்டர் என்பர் வீட்டின் அருகில் சென்ற போது கவனித்தேன் , அங்கே அவர் வீட்டின் முன்பு நின்ற பெரிய வேப்பமரத்தின் அடிநிழலில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதியில் , தாங்கள் படுப்பதற்கு தோண்டிய பள்ளத்தில் ..கருப்பும் வெள்ளையும் கலந்த மற்றும் சாம்பல் நிற நாயோடு , செவப்பு வெள்ளை கலரும் மற்றொரு முழுவதும் கருப்பு நிறத்திலுமாக நான்கு நாய்கள் ஓன்றையோன்று கடித்து விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றை தாண்டித்தான் கடையை அடைய முடியும். நாய்களை மொத்தமாக பார்த்தும் கலக்கம் ஏற்ப்பட்டது , கண்டும் காணாதது போல் கடந்துவிடத்தான் நினைத்தேன்.. வீரமிக்க மூவேந்தர்கள் ஆண்ட மண்ணில் பிறந்த நான் சாதாரண நாய்களின் முறைப்புக்கு பணிவதா என எனக்குள் திடிரென விழித்தெழுந்த வீரத்தால் விவேகம் இழந்து.. அவற்றை விரட்டும் நோக்கில் ஒரு சிறிய ஓட்டாங்கண்ணியை கையில் ஆயுதமேன ஏந்தி நாய்களை நோக்கி எறிவது போல பாசாங்கு செய்தேன். அதனை கண்டு அஞ்சி பதுங்கி பயந்து ஓடிவிடும் என நான் நினைத்த அடுத்தநொடி எனை நோக்கி பாய்ந்தன அந்த நாய்கள் . அதிர்ச்சியில் நான் தன்னியல்பாக
" ஆஆஆஆ.. யம்மா யப்பா...யம்மா யப்பா... " என கத்திக்கொண்டே புறமுதுகிட்டு ஓடினேன்.. அலறி குதித்து ஓடிய என் கால்களில் வந்து வந்து உரசியது நாய்களின் முகங்கள், சில மீட்டர்கள் துரத்திய பிறகு நின்று என்னை பார்த்து லொள்! லொள்! என்று குரைத்தன அவை. அது என் காதில் "நானும் மூவேந்தர் மண்ணில் பொறந்தவன் தாண்டா " என்று விழுந்தன...!! பின்னர் பொழச்சி போ என்பது போல என்னை விட்டு திரும்பி சென்றன ... ஆனால் நான் போட்ட சத்தத்தில் ஊரே வீட்டை திறந்து வெளியே வந்து வேடிக்கைபார்க்க .. வேடிக்கை பார்த்த என் சமவயது நண்பிகள் முன் அவமானத்தில் கூனி குறுகி. "கடன்பட்ட நெஞ்சம் போல் கலங்கிய இலங்கை வேந்தன்" போல தலைகுனிந்து நடந்தேன் . பகையிடம் புறமுதுகிட்டு வந்தது அவமானக இருந்தாலும், முதுகில் விழுப்புண் படாதது சற்று மனநிறைவை தந்தது .
நாய்க்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்க . பல வீடுகளில் நம்மை வரவேற்ப்பதே நாய்கள் தான் . என் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு சொந்த பந்தங்களை அழைக்க சென்றபோது .. பெரும்பாலான வீடுகளில் என் குரலுக்கு பதில்குரல் நாய்களிடம் இருந்து தான் முதலில் வந்தது. என் நண்பர் வீட்டிலும் அதே போலவே அவைகளின் சத்தம் கேட்ட பின்னர் நண்பர் வந்து காம்பவுண்டு கேட்டை திறந்து உள்ளே வாருங்கள் என்றழைத்தார்.. நண்பரை நம்பி நானும் கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததும் , இன்னும் வேகமாக குரைத்துக்கொண்டே என்னை நோக்கி ஓடி வரும் நாயை பார்த்து பயந்து நண்பரை பார்த்து, " ஏங்க நாயை பிடிங்க" என்றேன்..
நண்பரோ
"அது கடிக்காதுங்க சும்மா தைரியமா உள்ள வாங்க" .. என்றார் .
ஆனால் என்னை நோக்கி கொடும்பல்லை காட்டியவாறே ஓடி வரும் நாய் கடிக்காது என்று எவ்வாறு நம்புவது . எண்ண ஓட்டங்கள் " ஊசி மருத்துவமனை" என எங்கெங்கோ செல்ல , உடல் வியர்க்க கண்ணை மூடியபடி யோக நிலையில் நிற்க்கும் சமணமுனியை போல மூச்சை பிடித்தபடி நான் சரணாகதியில் நிற்க்க . ஓடி வந்த நாய் எனை சுற்றி மோப்பம் பிடித்தது. நண்பர் வந்து ஏதோ ஓரு வடமொழியில் ஒரு நமக கூறி நாயை அழைத்து சென்றார். செல்லும் போது ஏங்க நாய்க்கு இப்படி பயப்படுறிங்க என்று கேட்டார். நான் போரில் புறமுதுகிட்டதை எப்படி இவரிடம் கூற என்று நான் நினைத்துக் கொண்டிந்த போது, நண்பரே தொடர்ந்தார் நல்லவேளை நீங்க ஓடவில்லை ஓடியிருந்தால் கடித்திருக்கும் என்று கூறிவிட்டு என் குலம் விசாரிக்க ஆரம்பிக்க. எனக்கோ அவர் குடியை விட்டு கிளம்பினால் போதும் என்று இருந்தது ...
சமீபத்தில் என் வீட்டு தோட்டத்தில் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்த முயலை , கூண்டை கடித்து உடைத்து நான்கு நாய்கள் வேட்டையாடியதை காணொளியில் கண்டு மனம் வெதும்பி போனேன். என் மகள் ஆசையாக வளர்த்த முயலது.
ரோடுகளில் கண்டமேனிக்கு உலாவும் தெருநாய்கள் வாகனங்களில் செல்வோரை விரட்டி சென்று கடிக்க முயன்றும் , திடீரென இருசக்கர வாகனங்களுக்கு குறுக்கே புகுந்து வாகன ஓட்டிகளுக்கு எமனாக மாறுகின்றன. பனிபொழியும் மார்கழி மாதங்களில் இவர்களின் தொல்லை தண்டவாளத்தை விட்டு தடம்மாறிய தொடர்வண்டி ரகம்.. ("நாய்க்காதல்" )
வளர்ந்த நாடுகளில் நாய்களை வளர்ப்பதற்கு அரசிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் . ரேபிஸ் எனப்படும் வெறி நோய்க்கான தடுப்புசிகளை காலம் தவறாமல் செலுத்தி இருக்க வேண்டும் . இவை எவையுமே பின்பற்றாமல் நமது ஊர்களில் வளர்க்கப்படும் நாய்கள் சற்று ஆபத்தானவை தான் .
(முக்கியகுறிப்பு : நான் தங்கள் வீட்டுக்கு வரும் போதாவது நாயை கட்டிவைங்க நண்பர்களே நாய்களிடம் நானும் எத்தனை முறைதான் நாய்களிடம் புறமுதுகிடுவது 😀)
- விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️...
Ithu ஞாயமான சரியான,தேவையான ,அவசியமான பயம்தான்,ஊசியை நினைத்து.நானும் இதுபோன்ற கிராம சூழ்நிலையில் வாழ்ந்திருந்தாலும் உங்களது கடி அனுபவம் எனக்கு கிடையாது.
ReplyDeleteநன்றி 🙏🏻
Deleteநாய் பற்றிய பயத்தை நகைச்சுவையோடு விளக்கியது அருமை.
ReplyDeleteமேலும் கும்பா ஓட்டாங்கண்ணி போன்ற வார்த்தைகள் பழைய நினைவுகளுக்கு இழுத்துச் சென்றது.வாழ்த்துக்கள் 👍
சூப்பர் பழைய ஞாபகங்கள் ஊரை சுற்றி வந்தது போல் இருந்தது🙏😊😊
ReplyDeleteநன்றி 🙏🏻
Delete