எங்கள் பண்பாடும், திருவிழாவும் , வழிபாடும் - பாகம் 2

மார்கழி பிறந்தாலே உடலும், உள்ளமும் குளிர்ந்து போகும் . இரவின் முன் பகுதியில் ஆரம்பிக்கும் பனி பொழிவு மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் .ஆத்தூரில் இருந்து எங்கள் ஊர் செல்லும் பாதையின் இரண்டு பக்கமும் வாழை தோட்டங்களும் , வெற்றிலை கொடிக்காலும் , பனை , தென்னை மரத்தோட்டங்களுமாக பசுமை விரிந்து கிடக்கும் . வெற்றிலை கொடிக்காலில் அகத்தி விதை முளைத்து இரண்டு அடி உயரம் வளர்ந்து இருக்கும் . அதன் இலைகள் மீது பனி பொழிந்து சிறு,சிறு நீர்த்திவலைகளை உருவாகி இருக்கும் . அதன் மீது இளம் காலை சூரிய ஒளிபட்டு அவை பச்சை மரகதம்போல் மின்னிக்கொண்டு இருக்கும் . வாழைதோட்டங்கள் எல்லாம் நீர் தெளித்து கழுவிட்டது போல் பசுமையாக இருக்கும் . தென்னை , பனை ஓலைகளில் இருந்து வழிந்து தரையில் சொட்டும் பனித்துளிகளை பார்த்தால் , மரத்தின் இளம் பாலைகளை சீவி விட்டால் சொட்டும் பதனீர் போல சொட்டிக்கொண்டே இருக்கும். அந்த காலை வேளைகளில் தோட்டங்களுக்கு சென்றால் . பனித்துளிகளின் எடை தாளாமல் தலையை தனிந்து இருக்கும் புற்களையும...