மனம் மயங்கும் மழைக்காலம் 🌧☁️🌨⛈️ ( The enchanting rainy season 🌨☁️🌧⛈️)
ஊரில் வெப்பநிலை மிகக்கடுமையாக இருப்பதால் தீபாவளி விடுமுறைக்கு தங்களை குளிர்பிரதேசங்களுக்கு குறைந்தது இரண்டு நாட்களாவது அழைத்து செல்ல வேண்டும் என்று போர்கொடி தூக்கினர் என் மனையும் மகளும். ஒப்புக்கொண்ட நானும் பலவற்றை ஆராய்ந்து மேற்கு மலை தொடர்ச்சியில் அமைந்த மேகங்கள் தவழும் மேகமலை ,தேக்கடி , வாகமன் போன்ற இடங்களுக்கு போகலாமா என பலவாறாக குழம்பி கொண்டிருந்தேன் . அப்போதுதான் அந்த அறிவிப்பு வந்தது , வடகிழக்கு பருவமழை தொடங்கியதின் காரணமாக தென் தமிழகங்களில் பரவலாக மழை பெய்ய வாய்பிருப்பதாக. ஏற்கனவே எங்கே செல்வது என்ன செய்வது போன்ற எண்ணங்களால் அலைக்கழிந்த மனதுடன் இருந்த எனக்கு , இந்த அறிவிப்பு மேலும் குழப்பத்தை விளைவித்தது .இதை பற்றி என்னவளிடம் கலந்தாலோசித்தேன். புலி வருது ...புலிவருது ... என்று புளிப்பு காட்டுபவர்களின் பேச்சை நம்ப வேண்டாம் என்று பழிப்பு காட்டினார்.. வருடம் தோறும் வராமல் போகும் வடகிழக்கு பருமழையை நம்பி தைரியமாக பயணிக்கலாம் என்பது நம்பியவளின் நம்பிக்கை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு வானிலை மாறி , மாரி மாறாமல் பெய்வதை கவனிக்க தவறியிருப்பாள் அவள் .
வானிலைமையம் அறிவித்தது போலவே , என்னுடைய ஒரு வாரகால குறுகிய விடுமுறை தொடங்குவதற்கு இருநாட்களுக்கு முன்பாகவே தென்தமிழகம் எங்கும் பரவலாக மழை பொழிய தொடங்கிவிட்டது. அதிலும் ஆக அதிகமான மழைபொழிவு எங்கள் பகுதியில் பதிவாகியிருந்தது .. இது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொருபுறம் மழையால் என் விமான பயணத்திற்கு இடையூறு வருமோ என்ற பயமும் இருந்தது . ஒருவழியாக எந்த இடர்பாடுகளும் இல்லாமல் நான் பயணித்த விமானம் வெண்பஞ்சு பொதிகளாக சூழ்ந்திருந்த மேக கூட்டத்தை கிழித்து கொண்டு தூத்துக்குடியை நெருங்கிய போது மழை பெய்யத் தொடங்கியது .. மழைச்சாரல் பட்டு வழிந்த நீரானது, சிற்றோடை போல விமானத்தின் சன்னல் கண்ணாடிகளில் வழிந்தோட . புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் இரு மாதகால இடைவெளிக்கு பிறகு தரை இறங்கினேன்..
பல வருடங்களுக்கு பிறகு மிகவும் பசுமையாக , இளமையில் நான் அனுபவித்த அதே குளிர்ச்சியான இளமையுடன் எனது ஊரை பார்த்த போது மனது குதூகலித்து குத்தாட்டம் போட்டது. மனதில் ஒளிந்திருந்த மழைக்காதல் ஒளிர்க்க , மனையாளிடம் மழையை காரணம் காட்டி சுற்றுலா திட்டத்தை புறக்கணித்து விட்டு . இன்றும் இளமை மாறாமல் வருடந்தோரும் வனப்புடன் வளரும் எங்க ஊர் வாய்க்காங்கரை அரசமரம் போல , இயற்கை இளமை தவழும் எனது ஊரை தீராத காதலுடன் சைட் அடிக்க தொடங்கினேன் ..
சேவல் கூவ எழுந்தவனை, கோவர்த்தன் பிடித்த குடையேன, கூலிங் கிளாஸ் அணிந்தது போல் கூறாப்பாக இருக்கும் வானமும் , வசந்தத்தை வரவேற்று பன்னீர் தெளிப்பது போல தூறிக் கொண்டே இருந்த மழையும், மாயோனின் மாயமேன மனதை மயக்க . இருசக்கர வாகனத்தில் கிளம்பினேன் . குளிர்ந்த குளத்து நீரில் தலை மூழ்கி வந்த மங்கையின் அடர்ந்த கருங்கூந்தலில் சூடிய சூழ்மலரை போல , நீண்ட தார் சாலையின் இருபக்கமும் நின்ற மரங்கள், மழையில் நனைந்து வழிந்த நீரை வேரில் சேர்த்து அவற்றால் தளிர்த்த பச்சையம் பளிச்சிட புன்னகைக்க, அந்த பசுமை அனுபவித்துக் கொண்டே , பலவகை பறவைகளும் பல்லுயிர்கள் வாழும் ஆத்தூர் குளத்தின் அருகே வந்த போது, கீழ்வானத்தில் என் மனதை மலரவைக்கும் நிகழ்வைக் கண்டேன். நிலமகள் மழையில் குளிப்பதை கண்டதாலோ என்னவோ ஞாயிறு அவன் நாணி சிவந்து கரியமேகத்திற்குள் சென்று மறைந்தான். அவனுக்கு கூச்சம் தீரவில்லையோ !! இல்லை தீராத காதலில் விழுந்தானோ !! அறியேன் , அதன் பிறகு அன்று முழுவதும் அவன் நிழல் கூட நிலமகளை தீண்டவில்லை .
எங்கள் ஊரை கானல் நீராடும் கானகம் என எள்ளிநகையாடும் என்னவளையும் என் மகளையும் , பருவமழையின் காரணமாக கானமயில் சிறகைவிரித்தது போல் , பன்னீர் தெளித்து அலசி விட்டது போல் பளபளக்கும் , என்னவர்கள் கவனிக்க மறந்த எனது ஊரின் அழகான பக்கங்களை, அறிய வைக்க தகுந்த தருணம் இது தான் என்றறிந்தேன் . ..
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் ஒரு பகுதியான தூத்தூக்குடி மாவட்டத்தில் மட்டும் 200 மேற்ப்பட்ட குளங்கள் இருக்கின்றன. அந்த குளக்கரைகளில் எல்லாம் குலம் காக்கும் அய்யனார் கோவில்களும் , அம்மன் குடியிருக்கும் நூற்றுக்கணக்கான குக்கிராமங்களும் , பச்சைமால் மாமலை மேனியனின் நவபதிகளும் , மால்மருகனின் படைவீடும், அலகில் சோதியனின் சிற்றம்பலங்களும் நிறைந்த தெய்வீகமான இப்பகுதியில் குளங்களுக்கு நீரை கொண்டு போகும் கால்வாய்களும் , நீரோடைகளும் அவற்றின் கரையோரமாக இந்த கிராமங்களை இணைக்கும் சாலைகளுமாக அமைந்திருக்கும் . எங்கள் ஊரை பார்த்து ரசிக்க எப்போதும் நான் பயன்படுத்துவது நெடுஞ்சாலையின் நெருக்கடியில்லா இந்த இணைப்புச் சாலைகளை தான்.
வாய்கால் கரையோரம் படர்ந்திருக்கும் கரும்பச்சை நிற கரிசலாங்கண்ணி கொடிகளில் பூத்திருக்கும் அடர்மஞ்சள் பூக்களின் கூட்டமும் , வெண்மஞ்சள் பூவை தாங்கி நிற்கும் நீண்ட பூக்காம்பையுடைய வெட்டுகாயப்பூண்டு புதர்களும் , ஊதா நிற டிசம்பர் பூக்களும் , மழைநீரை தாங்கியபடி தடாகத்தில் மிதக்கும் தாமரை இலைகளும் , இன்னும் என்னற்ற படர்கொடிகளும், கொடி படர்ந்த மரங்களும் , அடர்வனமென பரந்த வாழைத்தோட்டங்களும், வயல்வெளிகளுமாக நீளும் , இச்சாலைகளில் குளிரை பூசிவரும் பருவக்காற்றை தழுவியபடி மனதுக்கு நெருக்கமானவர்களுடன் பயணித்த போது..
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!
வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்" ..
எனும் பாரதியின் கவிதை தான் ஓடியது. ..
காயல்பட்டினம் கறிகஞ்சி , வாடா , பரோட்டா சால்னா என தொடங்கி அடைக்கலாபுரம் கருப்பட்டி காப்பியுடன் பொரிவிலங்காயும் , கருங்குளம் பால்பன்னுடன் கட்டாஞ்சாயாவும், புன்னையடி சரவண பவனில் மதிய உணவு என்று , வண்டல் மணல் நிறைந்த வயல்வெளியும் , செம்மண் மேடுகள் நிறைந்த முந்திரி காடும் , வெண்மணல் நிறைந்த கடலாடும் பட்டிணங்களுமாக வெவ்வேறு நிலப்பரப்பை அறிமுகப்படுத்தி , அவர்களை என் உள்ளுனர்வோடு ஒன்றவைத்து ரசிக்க வைத்ததில் ஒர் நிறைவு .
கதிரவன் கனல் தீண்டா காலையில் , ஊதக்காத்து வீசும் வாய்க்காங்கரை சாலையில் , பூங்குயிலின் இசையுடன் பறக்கும் பறவைகளை பார்த்தபடி பூந்தூரலில் நனைந்தபடி நகரும் பேரின்பம் , அடர்ந்த காடழித்து மலைமுகடுகளில் கட்டப்பட்ட காட்டேஜ்களில் தங்கினால் கிடைக்குமா .. பட்டுப்பூச்சிகள் கூட இல்லாத பட்டணத்து பூங்காக்களில் தான் இருக்குமா..
எளிய மனிதர்களோடு அமர்ந்து ஆலமரத்து டிக்கடையில் அமர்ந்து சாப்பிடும் சூடான சமோசாவும் சுக்கு காப்பியும் தரும் சுகம் , மால்களில் உள்ள உணவு கடைகளில் தான் கிடைக்குமா... தினம் தினம் இது தொடராதா என மனது ஏங்க .. ஏழுநாட்கள் விடுமுறை கழிந்த நிலையில் மனதில் பசக் என்று ஒட்டி பசுமையை பிரிய மனமில்லாமல் பறந்தேன் திரவியம் தேடி ..
விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️✍️..
உங்கள் மனதை வருடிய உங்கள் ஊரின் மறக்கமுடியாத இயற்கை சூழல்களும் மனிதர்களும், இளமை நினைவுகளும் இன்னும் மனம் மாறாமல் இருப்பதையும்,மீண்டும் நாகரிகத்தின் உச்சம்,மற்றும் வானுயர்ந்த கட்டிடங்களும் கொண்ட வெளிநாட்டில் இருந்து விடுப்பில் வந்து மீண்டும் உங்கள் மனதை வருடிய இளமை நினைவுகளை சிந்தாமல். அனுபவித்து நீங்கள். எழுதிய கட்டுரை மிக மிக சரியான தலைப்புடன் ,என்னை எனது ஊரின் இளமை கால அரை டவுசர்,நண்பர்களுடண்ஆற்ற்ஙகரை குளங்கள் ,பச்சை வயல் வெளிகள்,புகை வண்டி படிப்புக்காக பயணித்தது என்றுஎன்னை எனது ஊருக்கு கூட்டி சென்று விட்டது.அது சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போலாகுமா?????
ReplyDeleteநன்றி மாமா ...
Delete