"சமூகவிரோதிகள்" (" social enemies")
கடலும் கடல் சார்ந்த நிலமும் பாண்டிய மன்னர்களின் முக்கிய துறைமுகப் பட்டிணமான காயல்பட்டிணத்தின் அருகாமையில் , மழைநீர் வடிகால் சிற்றோடையின் கரையில் அமைந்திருந்த ஓடக்கரையில் உள்ள தாத்தாவின் வீட்டில் என் பள்ளி கால விடுமுறை நாட்கள் கழிந்தன.. நெல் வயல்கள் , வெற்றிலை கொடிக்கால் , வாழை என செழிப்பான ஈரநிலத் தாவரங்களும் , நன்னீரும் , வளமான வண்டல் மண்ணலால் நிறைந்த வயலும் வயல் சார்ந்த வாழ்வியலில் வளர்ந்த எனக்கு . கணுக்கால் புதைய வெண்பட்டு போன்ற பரந்த மணல் பரப்பில் ஒடை காடும் ,பனங்காடும், கற்றாழை செடிகளும், வேலிக்கு காவலாய் பசுமையான இலைகளும் வாய் விரிந்த மஞ்சள் பூவும் பம்பரக் காயுமாக நிற்க்கும் பூவரசு மரங்களும், பதியும் மணல் தரையில் செல்வதற்கு ஏதுவாக கார் டயர்கள் பொருத்திய மாடு வண்டியும், சுற்றிலும் உப்பு நீருமாக தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் மீது அமைந்திருந்த அந்த ஊரின் மாறுபட்ட அந்த சூழல் மிகவும் பிடித்தமானதாக இருந்தது . காலையில் காடறிய காட்டுக்குள் நுழைந்தால் ஒடை புதர்களில் தேன்கூடு எடுப்பது ...